ஊட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை....!
ஊட்டியில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல் மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். வேலைக்கு சென்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
இந்த கன மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதனால் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோன்று ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.