சத்துவாச்சாரி பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை

சத்துவாச்சாரி பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2023-04-02 14:47 GMT

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக மதிய வேளையில் சாலைகள், வீதிகளில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்த வெயிலின் வெப்பம் கடந்த 31-ந் தேதி இந்தாண்டில் முதல்முறையாக 100.4 டிகிரியை பதிவு செய்தது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. வேலூரில் நேற்று 96.8 டிகிரி வெயில் பதிவானது. மாலை 3 மணியளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. சிறிதுநேரத்தில் வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், காகிதப்பட்டறை, எல்.ஐ.சி. காலனி, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. திடீர் மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தின் கீழே வாகன ஓட்டிகள் பலர் தஞ்சம் அடைந்தனர். மழையினால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. கோடை வெயிலை தணிக்கும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்