பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைரோடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுரங்கபாதையில், தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்படி நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் மதியத்துக்கு பிறகு கருமேகம் சூழ்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.குறிப்பாக கொடைரோடு, அம்மையநாயக்கனூர், மெட்டூர், காமலாபுரம், சக்கைய நாயக்கனூர், ஜல்லிபட்டி, நாகையகவுண்டன்பட்டி, ராஜதானிக்கோட்டை, மாவுத்தன்பட்டி, அம்மாபட்டி, பொம்மணம்பட்டி, ஒருத்தட்டு, மாலையகவுண்டன்பட்டி பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு ஆகிய இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
குறிப்பாக அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கபாதையில் மழை தண்ணீர் நிரம்பியது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரம் சென்று பள்ளப்பட்டி வழியாக சென்றன. தொடர்ந்து சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டுள்ளனர். எப்போது மழை பெய்தாலும் சுரங்கபாதையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. எனவே அங்கு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மையநாயக்கனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் நிலக்கோட்டை பகுதியில், நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு குளிர்ந்த வானிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.