காரியாபட்டி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
காரியாபட்டி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியது.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியது.
பலத்த மழை
காரியாபட்டி, ஆவியூர், நரிக்குடி, புல்வாய்க்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. . நரிக்குடி ஒன்றியம் தச்சனேந்தல் கிராமத்திலிருந்து வி.கரிசல்குளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று சாலையில் சாய்ந்து கிடந்த மரங்களை உடனடியாக அகற்றினர். மேலும் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள காலனியில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. மின்வாரிய அதிகாரிகள் அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்தனர். மேலும் காரியாபட்டி பகுதியில் பெய்த மழைக்கு இந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது.
வாழை மரங்கள் சேதம்
ஆடி மாதம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிலக்கடலை, எள், பயறு வகைகள், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆவியூர் கிராமத்தில் விவசாயி பரமசிவம் என்பவர் தனது 1 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் நேற்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமானது.
நிவாரணம்
அறுவடை நேரத்தில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயி கவலையில் உள்ளார்.
கீழே சாய்ந்த வாழை மரங்களை தூக்கி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.