கொட்டி தீர்த்த கன மழை

கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கீழசெருவாயில் 10 செ.மீ. மழை பதிவானது.

Update: 2022-09-01 18:27 GMT

கடலூர், 

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை மதியம் 12.30 மணி வரை விடாமல் கொட்டி தீர்த்தது. சில நேரங்களில் கன மழையாகவும், சில நேரங்களில் மிதமான மழையாகவும் பெய்தது.

தண்ணீர் சூழ்ந்தது

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர். தாழ்வான குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்து நின்றதை பார்க்க முடிந்தது.

தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள், தற்காலிக உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். காய்கறிகள், பழங்களை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது. அதிகாலை தொடங்கிய மழை விடாமல் பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்த படியும், சிலர் நனைந்தபடியும் சென்றதை பார்க்க முடிந்தது.

ஏமாற்றம்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் காலையில் நடைபயிற்சிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் மட்டும் குடைபிடித்தபடி நடந்து சென்றனர். விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் தொழுதூர், பெலாந்துறை, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, கீழசெருவாய், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, பண்ருட்டி, லக்கூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழசெருவாயில் 10 சென்டி மீட்டர் (106 மில்லி மீட்டர்) பதிவானது.

குறைந்த பட்சமாக குப்பநத்தம், புவனகிரியில் தலா 1 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 19.79 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெலாந்துறை - 84.2

தொழுதூர் - 47

வடக்குத்து - 33

லால்பேட்டை - 33

காட்டுமன்னார்கோவில் - 32

வேப்பூர் - 23

கொத்தவாச்சேரி - 20

குறிஞ்சிப்பாடி - 19

கலெக்டர் அலுவலகம் - 17.8

எஸ்.ஆர்.டி.குடிதாங்கி - 12.5

லக்கூர் - 11

பண்ருட்டி - 11

கடலூர் - 9.6

வானமாதேவி - 9

அண்ணாமலைநகர் - 9

சிதம்பரம் - 4.4

பரங்கிப்பேட்டை - 2.8

சேத்தியாத்தோப்பு - 2.2

ஸ்ரீமுஷ்ணம் -2.1

மே.மாத்தூர் - 2

Tags:    

மேலும் செய்திகள்