தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.
எனினும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 12 செ.மீ. சிவகங்கை மற்றும் கோடநாட்டில் தலா 8 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. மேலும், தஞ்சை, ஈரோடு-பெருந்துறை, கரூர்- பாலவிடுதியில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.