சென்னையில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்று இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2022-11-11 22:07 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நேற்று காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பெரும்பாலானவர்கள் அதிகாலையில் மேற்கொள்ளும் நடைபயிற்சி மற்றும் விளையாட்டுகள் நேற்று தடைபட்டது.

வாகன ஓட்டிகள் சிரமம்

அதைத்தொடர்ந்து அலுவலகம் செல்லும் நேரத்திலாவது மழை சற்று ஓயாதா? என்று காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் மழைக் கோட்டை போட்டுக் கொண்டும், குடைகளை கையில் பிடித்தபடியும் மக்கள் அலுவலகங்களுக்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் அலுவலகத்திற்கு புறப்பட்ட மக்கள் சற்று சிரமப்பட்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம், மழைநீர் தேக்கத்தின் காரணமாக சாலைகளில் உள்ள குண்டு குழிகள் தெளிவாக தெரியாத நிலை மற்றும் பிற வாகனங்கள் செல்வதால் தங்கள் மீது சாலையில் தேங்கி உள்ள மழைநீர் அடிக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாகவே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால், சென்னையில் பெரும்பாலான சாலைகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

துரித நடவடிக்கை

பொதுவாக மழைக்காலம் என்றாலே சென்னையில் சாலை போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது வழக்கம். ஆனால், அண்மை காலங்களில் இவ்வாறு சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. நேற்று பெய்த மழை காரணமாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் சற்று தேங்கிய போதும், மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையால் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

இதுபோக சென்னையில் உள்ள எஞ்சிய சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத நீர் இறைக்கும் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றினர். இது தவிர சென்னை நகரின் பிற பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீரையும் ராட்சத நீர் இறைக்கும் மோட்டார்கள், டிராக்டர் மற்றும் மினி லாரிகளில் பொருத்தப்பட்ட நீர் இறைக்கும் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மணலால் நிரம்பிய

அணுகு சாலை

இதேபோன்று கொளத்தூர் கணபதிராவ் நகர் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்குவது வழக்கம் இதனை ராட்சத நீர் இறைக்கும் எந்திரம் மூலம் தொடர்ச்சியாக தண்ணீரை வெளியேற்றி வருவதால் அந்த பகுதி மழைநீர் இன்றி காணப்பட்டது. மழைக்காலங்களில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் நிறைய இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக ராட்சத நீர் இறைக்கும் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மழைநீர் தேங்கினாலும் அது சிறிது நேரத்தில் வெளியேற்றப்படுவதால் மக்களின் சிரமங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் சென்னை மாநகரில் மிகவும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதையும் பார்க்க முடிந்தது. வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா, பெரம்பூர் பி.பி. சாலை, கொளத்தூர் அம்பேத்கர் நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், கோயம்பேட்டை சுற்றி உள்ள சில குடியிருப்பு பகுதிகள், தியாகராயநகர் உஸ்மான் சாலை, வடபழனி ஆற்காடு சாலை உள்ளிட்ட சில சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. மெரினா கடற்கரையின் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழைநீரில் மக்கள் விளையாடியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மெரினா கடற்கரை அணுகு சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதுதவிர, காற்றின் வேகம் காரணமாக பட்டினப்பாக்கம் அணுகு சாலை முழுவதும் கடல் மண்ணால் நிரம்பி காணப்பட்டது.

மழை நீருக்குள் திருமணம்

தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் ரெட்டேரியில் இருந்து மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீரானது கதிர்வேடு கால்வாயில் கலந்து கொளத்தூர் பகுதியில் நகருக்குள் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் ரெட்டேரி மறுகால் பகுதியை மணல் மூட்டைகள் அடுக்கி சற்று உயரப்படுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அதனை மக்கள் வெளியேற்றியதையும் பார்க்க முடிந்தது. இதேபோன்று, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த தேங்கிய மழைநீருக்குள்ளும் அங்கு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளுக்கு

வேண்டுகோள்

மேலும் வடபழனி ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் காணப்படுவதால் பெருமளவில் குண்டு குழிகள் காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதால், இந்த குண்டு குழிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்