விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்த மழையினால் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT


விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன்பிறகும் நள்ளிரவில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.

இதேபோல் முகையூர், மணம்பூண்டி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.

இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

மேலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நகரின் பல்வேறு இடங்களிலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதிலும் இரவு 10 மணியில் இருந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்பட்டனர். அதன் பிறகு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின்மாற்றி பழுதையும், அறுந்து கிடந்த மின் கம்பிகளையும் சரிசெய்தனர். அதன் பிறகு நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்