வால்பாறையில் பலத்த மழை
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகராட்சி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
வால்பாறை
வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகராட்சி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
பலத்த மழை
வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நின்று விட்டது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் இரவில் குளிரும், பகலில் கடுமையான வெயிலும் கலந்த ஒரு காலநிலை நிலவி வருகிறது. மேலும் கடந்த 95 நாட்களுக்கு பிறகு சோலையாறு அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து குறைந்து நேற்று முன்தினம் 159 அடியானது. சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்வதும் நின்று போனது.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பல்வேறு எஸ்டேட் பகுதியிலும் மழை பெய்தது.
வெள்ளம் புகுந்தது
இந்த மழை காரணமாக வால்பாறை நகரின் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி மார்க்கெட் பகுதிக்கு செல்லும் படிக்கட்டிலும் வெள்ளம் புகுந்து பாய்ந்தோடியது. தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று வீடுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் கனமழை காரணமாக குடைகளை பிடித்துக்கொண்டு சிரமத்துடன் நடந்து சென்றனர்.
மேலும் வாரத்தின் இறுதி நாளாக இருந்ததால் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழை காரணமாக எங்கும் செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் வியாபாரிகள் இருந்து வருகின்றனர்.