திருக்கோவிலூர் பகுதியில் பலத்த மழைமரக்கிளைகள் முறிந்து விழுந்தன-மின்சாரம் துண்டிப்பு
திருக்கோவிலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகரில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 6 மணிக்குமேல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதையடுத்து சில நிமிடங்களில் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் நகர சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழையின்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்த மரக்கிளைகளை அகற்றியதுடன், மின் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை காரணமாக திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் மூங்கில்துறைப்பட்டு, உளுந்தூர்பேட்டை, சங்கரபுரம் உள்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.