விழுப்புரம், சங்கராபுரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம், சங்கராபுரத்தில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சங்கராபுரம்,
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதுபோல் விழுப்புரத்திலும் கடந்த வாரம் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயில் சுட்டெரித்து காணப்பட்டது. நேற்றும் காலையில் இருந்து மதியம் வரை விழுப்புரம் பகுதியில் வெயில், பொதுமக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை 2.45 மணியளவில் விழுப்புரம் நகரில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடமாக தூறிக்கொண்டே இருந்து அதன் பிறகு ஓய்ந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று மாலை 5.20 மணி முதல் 5.40 வரை சாரல் மழை பெய்தது.