சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை

Update: 2023-05-28 19:35 GMT

சேலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே பகலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. சூறாவளி காற்று ஏதும் இல்லாமல் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களிலும், சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பள்ளப்பட்டி, களரம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, சின்னத்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீதிகளில் அதிகளவில் தேங்கி நின்றது.

வீடுகளுக்குள் தண்ணீர்

கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, மணக்காடு ராஜகணபதி நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 5 ரோட்டில் மழைநீர் வெள்ளம்போல் ஆறாக ஓடியதை காணமுடிந்தது.

சங்கர் நகர் பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்களில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சேலத்தில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவியது. கன்னங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் புதுஏரி, மூக்கனேரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்காட்டில்

அதேபோல், ஏற்காட்டில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள பாறைகளில் திடீரென அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டியது. ஏற்காட்டில் குளுகுளு சூழல் நிலவியதால் கோடைவிழாவை காண வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

ஏற்காடு-36.2, ஆனைமடுவு-27, சேலம்-25, சங்ககிரி-24.1, கரியகோவில்-19, தம்மம்பட்டி-15, ஆத்தூர்-10.8, காடையாம்பட்டி-6,ஓமலூர்-3.

மேலும் செய்திகள்