புதுக்கோட்டையில் கோடை காலம் முடிந்த பின்பு இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மே மாதம் அடிக்கும் வெயில் போல சுட்டெரிக்கிறது. இடையில் அவ்வப்போது இரவு நேரங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு மேல் லேசாக தூறல் மழை பெய்தது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் மழை பலமாக பெய்தது. ஓரே சீராக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து இரவில் மழை தூறியபடி இருந்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
திருவரங்குளம் வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.