முதுகுளத்தூர், பரமக்குடியில் கனமழை

முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதையொட்டி விவசாய பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

Update: 2023-09-21 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதையொட்டி விவசாய பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

கனமழை

முதுகுளத்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் முதுகுளத்தூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளான செல்வநாயகபுரம், காக்கூர், கீரனூர், நல்லூர், ஏனாதி, பேரையூர், இலந்தைக்குளம், தேரிருவேலி, விளங்குளத்தூர், காக்கூர், கருமல், குமார குறிச்சி, ஆதம் கொத்தங்குடி, பூசேரி, வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.

தற்போது இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் விதைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வாட்டிய வெயிலால் நெற்பயிர் முளைக்காமல் போய்விடும் என விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இச்சூழ்நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் ெவப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாய பணிகள் தீவிரம்

அதேபோல் பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மஞ்சூர், அரியனேந்தல், பூவிளத்தூர், தெய்வேந்திர நல்லூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் நேற்று வானில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களில் விவசாய நிலங்களில் நெல் பயிருக்காக டிராக்டர் மூலம் உழவு பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்