கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதற்கிடையே காலை முதல் வெப்பம் நிலவிய நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன. பின்னர் பகல் 2 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது.
இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து இயல்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் மாலையில் மேகமூட்டங்கள் தரையிறங்கி லேசான சாரல் மழை பெய்தது. அடிக்கடி மாறி வரும் பருவ சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.