கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கனமழை; மண் சரிவு, மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் 110 மில்லிமீட்டர் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. மண் சரிவு, மரம் சாய்ந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் 110 மில்லிமீட்டர் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. மண் சரிவு, மரம் சாய்ந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளு குளு சீசன்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண சூழல் நிலவுவதுடன் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வழக்கம்போல் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி இதமான சூழல் உருவானது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் லேசான சாரல் மழையும் பெய்தது.
வெளுத்து வாங்கிய மழை
இதற்கிடையே மாலை 5 மணிக்கு மேல் கொடைக்கானல் மலைப்பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்வதற்கான சூழல் உருவானது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மாலை 5 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு 11 மணி வரை நீடித்தது. சுமார் 6 மணி நேரம் வெளுத்து வாங்கியது.
மழையுடன் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. குறிப்பாக வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் உள்ள மூளையாறு என்ற பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலை மற்றும் மின்கம்பிகள் மீது விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மண் சரிவு
இருப்பினும் மரம் சாய்ந்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. அத்துடன் மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்ததால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர்.
இதேபோல் பலத்த மழையால் கொடைக்கால் அப்சர்வேட்டரி சாலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. உடனே அங்கு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரைந்து சென்று மண் சரிவை சரிசெய்தனர்.
நட்சத்திர ஏரி நிரம்பியது
கனமழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி, ஏரியை சுற்றியுள்ள சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏரிச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் ஏரிச்சாலைக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் மூலம் ஏரிச்சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கிவிட்டனர்.
மேலும் பலத்த மழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து உற்சாகம் அடைந்தனர். ஆனால் தொடர் மழையால் வெளியூர் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
110 மில்லிமீட்டர் மழை
கொடைக்கானலில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 110 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 109.2 மில்லி மீட்டரும், அப்சர்வேட்டரி பகுதியில் 92 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.