கொடைக்கானலில் கனமழை
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையினால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து குளிர் அதிகரித்தது. இந்த நிலையில் ேநற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பகல் 2.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் கடும் குளிர் நிலவியது. சுற்றுலா இடங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலத்த மழைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் மின்சார வயர்கள் மீது முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதில் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய உதவி செயற்ெபாறியாளர் முருகேசன் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சார வயர்களை சீரமைத்தனர். பின்னர் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.