கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை, வார விடுமுறைையயொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், குணாகுகை, டால்பின்நோஸ், பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் பூத்துக்குலுங்கிய பல்வேறு வண்ண பூக்களை பார்த்தும் உற்சாகம் அடைந்தனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று காலை முதல் இதமான சூழல் நிலவி வந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் உருவானது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் பலத்த மழையால் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழை பெய்தாலும், அதில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களையும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகளையும் பார்த்து ரசித்தனர்.