கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை

கொடைக்கானலில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-08-08 15:32 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெப்பமும், பிற்பகலில் லேசான சாரல் மழையும் பெய்தது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கார்மேகம் சூழ்ந்து கும்மிருட்டாக காட்சி அளித்தது. சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கொடைக்கானல் நகரின் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஏரிச்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையினால் வனப்பகுதியில் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வேளாண் பயிர்களுக்கு இந்த மழை புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்