கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை; மரக்கிளைகள் விழுந்து மின்கம்பிகள் சேதம்
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரக்கிளைகள் விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்தன.
அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டிய கொடைக்கானல் மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி பகலை, இரவாக மாற்றி வருகின்றன. மழை மற்றும் காற்று காரணமாக கொடைக்கானல் பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று கொடைக்கானலில் காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. மாலை நேரத்தில் சாரல் மழை பெய்ததால் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் வீடுகளுக்கு சென்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழை காரணமாக தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.
இதுதவிர மழையுடன் வீசும் பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் சேதமடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கொடைக்கானல் அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மின்கம்பிகள் சரிசெய்யப்பட்டு, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.