கரூர் மாவட்டத்தில் பலத்த மழை

கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-10-09 18:36 GMT

பலத்த மழை

மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் நேற்றிரவு சுமார் 7.15 மணி முதல் 8.45 மணி வரை 1½ மணிநேரம் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, தின்னப்பா கார்னர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன.

குளித்தலை-நொய்யல்

குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மற்றும் மிதமான மழை விடியற்காலை வரை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து மலை தூரிக் கொண்டே இருந்தது. மழையின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சாலையோர வியாபாரிகள் தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டனர்.

நொய்யல் அருகே உள்ள தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, கந்தம்பாளையம், பேச்சிப்பாறை, புன்னம், புன்னம் சத்திரம், உப்பு பாளையம், நொய்யல், மரவாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7.30 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், காகிதபுரம், மூர்த்திபாளையம், புகழூர்,நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம்,தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்