கரூர், தாந்தோணிமலை பகுதிகளில் பலத்த மழை
கரூர், தாந்தோணிமலை பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 மணி முதல் கரூர், வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூரல் மழை பெய்தது. பின்னர் நேற்று காலை சுமார் 7 மணி முதல் 7.45 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியது. இருப்பினும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழையை பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு சென்றனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-17, க.பரமத்தி-8, குளித்தலை-7, தோகைமலை-5, கிருஷ்ணராயபுரம்-4, மாயனூர்-1, பஞ்சப்பட்டி-7.2, கடவூர்-11.4, பாலவிடுதி-12.4, மைலம்பட்டி-18.