கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை மின்னல் தாக்கி தொழிலாளி பலி மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதில் விருத்தாசலத்தில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
கடலூரில் நேற்று காலை முதல் மாலை 3.30 மணி வரை வெயில் அடித்தது. அதன்பிறகு வானம் மேக மூட்டமாக மாறியது. சற்று நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி வரை மழை வெளுத்து வாங்கியது.
மரங்கள் விழுந்தன
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பள்ளிக்கூடம் முடிந்து சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தபடி சென்றனர். நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் உடனடியாக கடையை மூடினர். அண்ணா விளையாட்டு மைதானத்திலும் தண்ணீர் தேங்கியதால் பயிற்சிக்காக வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த மழைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பத்தில் சாலையோரம் நின்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு வாகனம் மரத்தில் சிக்கி சேதமடைந்தது. பின்னர் பாதிரிக்குப்பத்தில் வாகனங்கள் ஒரு வழிபாதையில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்ததும் பாதிரிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
மின்னல் தாக்கி பலி
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50). இவர் நேற்று மாலை அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் கோவிந்தன் மீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் செம்பளாக்குறிச்சி சுரங்க பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், கோபுராபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்தும், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றியும் சென்று வருவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ரெயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த சுரங்கத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். இந்த சுரங்கத்தில் மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.