சேரன்மாதேவியில் பலத்த மழை; ரெயில்வே சுரங்கப்பாதை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
சேரன்மாதேவி பகுதியில் பலத்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதை, வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பகுதியில் பலத்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதை, வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. புளியங்குடியில் வீடு இடிந்தது.
ரெயில்வே சுரங்கப்பாதை
நெல்லை-செங்கோட்டை பிரதான ெரயில் பாதையில், சேரன்மாதேவி 6-வது வார்டு அம்மநாதன் கோவில் தெரு, தெற்கு நாலாம் தெரு, வடக்கு நாலாம் தெரு பகுதி மக்கள் ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தினசரி அப்பகுதியில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகள் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கால்நடைகளும், வேளாண் பணிகளுக்கு தேவையான டிராக்டர், நடுவை எந்திரம் போன்ற வாகனங்களும் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்கின்றன.
மக்கள் அவதி
இங்கு மழைக்காலங்களில் பெருமளவில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மழைக்காலங்களில் இந்த ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கக்கூடிய மழை நீரை மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுபற்றி கவுன்சிலர் மாரிச்செல்வம் கூறுகையில், இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகும் நிலை இருக்கிறது. தேங்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும், என்றார்.
பலத்த மழை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சேரன்மாதேவி அண்ணாநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
உடனடியாக சேரன்மாதேவி பேரூராட்சி சார்பில் வாறுகால் சீரமைக்கப்பட்டும், மின் மோட்டார் மூலமும் தேங்கிய மழை நீர் வடிய வைக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேரன்மாதேவி தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.
இதில் சேரன்மாதேவி பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், துணைத்தலைவர் பால்மாரி, செயல் அலுவலர் மகேஸ்வரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீரவநல்லூர் பாரதிநகர் பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியது.