அந்தியூர் பகுதியில் பலத்த மழை:பர்கூர்- மைசூரு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தனபோக்குவரத்து பாதிப்பு

பர்கூர்- மைசூரு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Update: 2023-05-10 21:24 GMT

அந்தியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பர்கூர்-மைசூரு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பர்கூர் மலைப்பகுதி

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது.

அதேபோல அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஈரெட்டி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஈரெட்டியில் இருந்து தேவர் மலை செல்லும் ரோட்டின் குறுக்கே உள்ள ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

பாறைகள் விழுந்தன

தொடர் மழையால் பர்கூர் மலைப்பாதையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டு் வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பர்கூர் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பர்கூர்-மைசூரு மலைப்பாதையில் தாமரைகரை அருகே நேற்று காலை ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் இரு சக்கர வாகனங்கள், கார்கள் சென்றன.

அகற்றும் பணி

இது குறித்து பர்கூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்து சென்று பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு எச்சாிக்கை செய்யும் விதமாக பாறைகள் மீது வெள்ளை வர்ணம் பூசப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்