ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தொடர்மழை
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஆலங்குளம், கீழாண்மறைநாடு, மேலாண்மறைநாடு, வலையப்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, காளவாசல், கரிசல்குளம், கொங்கன்குளம், உப்புபட்டி, எதிர்கோட்டை, முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, சீவலப்பேரி, ராசாப்பட்டி, சங்கரமூா்த்திப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. 45 நிமிடங்கள் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றது.
கண்மாய் உள்ளிட்ட நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்து இரவு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.