பலத்த மழை எதிரொலி: வீரபாண்டி பகுதியில் நெல் அறுவடை பணி பாதிப்பு
பலத்த மழை காரணமாக வீரபாண்டி பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் சுமார் 17 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் லோயர்கேம்ப், கம்பம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெல் விளைச்சல் அடைந்து அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கடைமடை பகுதியான உப்புக்கோட்டை கூழையனூர், பாலார்பட்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விளைச்சலடைந்த நெற்கதிர்கள் சேதமடைந்து தரையில் சாய்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.