சென்னையில் தொடரும் கனமழை ; இருவர் உயிரிழப்பு
சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது
சென்னை
சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ மழை பெய்துள்ளது. வில்லிவாக்கத்தில் தான் அதிகமாக மழை பெய்துள்ளது.
வில்லிவாக்கத்தில் அதிகமாக 10 செமீ மழை பெய்துள்ளது. அங்கு நேற்று அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. இன்று அதிகாலை வரை வில்லிவாக்கத்தில் மழை பெய்து தற்போது நின்றுள்ளது.
வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கொட்டும் கனமழை கொட்டி வருகிறது. பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை ஐகோர்ட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்.
தொடர் மழையால் கிண்டி - கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இங்கெல்லாம் வெள்ளம் அதிகாலையில் சட்டென வடிந்துள்ளது.
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கனமழை: உதவி எண்கள்
மழை தொடர்பான புகார்களை 1913, 044-2561 9206, 044 - 2561 9207, 044 -2561 9208 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். 94454 77205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.
இதுதவிர சென்னை மாநகராட்சியின் "நம்ம சென்னை செயலி" மற்றும் மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார்.
வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.