காரைக்குடியில் இடி, மின்னலுடன் கனமழை
காரைக்குடியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம்
கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 29-ந்தேதியுடன் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் நிறைவு பெற்றது. இருப்பினும் தமிழகத்தில் வெப்பம் குறையாததால் கடந்த 3-ந்தேதி பள்ளிகள் திறக்க வேண்டிய நிலையில் ஒத்தி வைக்கப்பட்டு நாளை திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடைகாலம் முடிந்த நிலையில் பல்வேறு இடங்களில் காலை முதலே வெப்பம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வழக்கம் போல் காலையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
கனமழை
இதையடுத்து லேசான சாரலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சாரல் மழை சிறிது நேரத்தில் திடீரென இடி மற்றும் மின்னலுடன் கனமழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் வரை மழை நீடித்தது. அப்போது பலத்த காற்றும் அடித்ததால் அம்பேத்கர் சிலை அருகே உள்பட நகரில் பல இடங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
மேலும் பலத்த இடி மற்றும் மின்னல் காரணமாகவும், மரங்கள் சாய்ந்து விழுந்ததன் காரணமாகவும் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 10 மணி வரையிலும் வரவில்ைல. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
காரைக்குடி வைத்தியலிங்கம்புரம் பகுதியில் உள்ள ஒரு வீடு கனமழையால் சேதமடைந்தது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று திடீரென காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.