பலத்த சூறைக்காற்றுடன் கனமழை
சிவகங்கையில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
சிவகங்கை
சிவகங்கையில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
கனமழை
சிவகங்கை நகரில் நேற்று கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர். நேற்றும் வழக்கம்போல் காலையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 3 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்று மற்றும் மழையின் வேகம் அதிகரித்தது. இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதேபோல் சிவகங்கை துணைமின் நிலைய அலுவலகம் உள்பட நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
மின்கம்பங்கள் சாய்ந்தன
சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் காஞ்சிரங்கால் நவுரோஜி தெரு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் சிவகங்கை நகர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.