காரைக்குடி,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை மற்றும் மாண்டஸ் புயல் உள்ளிட்ட பருவநிலை காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகிறது. மழையை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பல்வேறு இடங்களில் பலத்த மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்களும், நோயாளிகளும் கடும் பனியால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த மழை பெய்தது.
காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் செக்காலை சாலை, வாட்டர் டேங்க் பகுதி, கல்லூரி சாலை, 100 அடி சாலை, பெரியார் சிலை, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், கல்லுக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காரைக்குடி வாட்டர் டேங்க் பயணியர் நிழற்குடை பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் பயணிகள் பஸ் ஏறுவதற்காக வந்தபோது கடும் சிரமம் அடைந்தனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.