சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது
சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது
வங்கக்கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 3 நாட்கள்(11-ந் தேதி, 12-ந் தேதி, 13-ந் தேதி) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நேற்று முன்தினம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்பட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இடைவிடாமல் கொட்டி தீர்த்தது
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பல மணிநேரம் வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பகலில் மிதமான அளவு மழை பெய்தது. இடையிடையே மழையின் வேகம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இரவு 9 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு முழுவதும் இடைவிடாமல் நேற்று அதிகாலை வரை மழை கொட்டித்தீர்த்தது.
44 செ.மீ. மழை பதிவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதீத கனமழை காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர், மாப்படுகை, பொன்னூர், பாண்டூர், உக்கடை, அருள்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.