தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளக்காடான சாலைகள்
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
கொட்டித்தீர்த்த கனமழை
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தேனி நகரில் இன்று மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
தேனி நகரின் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் குளமாக தேங்கியது. பங்களாமேடு பகுதியில் மதுரை சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு குளமாக தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மாலை 6 மணியளவில் அடுத்தடுத்து 4 ஆம்புலன்சுகள் இந்த வாகன நெரிசலில் சிக்கித் தவித்தன. பின்னர், அவை சாலையின் மற்றொரு பகுதி வழியாக வெளியேறி புறப்பட்டுச் சென்றன.
சாலைகளில் வெள்ளம்
பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பலரும் மழை வெள்ளத்தால் கடும் அவதியுடன் கடந்து சென்றனர். தேனியில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேறும் பிரதான வழித்தடமாக ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியது. அதுபோல், இந்த வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சுப்பன்தெரு திட்டச்சாலையிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் ஆறாக ஓடியது. அப்போது சாலையில் இருந்த வேகத்தடைகள் மற்றும் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் தடுமாறி கீழே விழுந்து பரிதவிப்போடு எழுந்து சென்றனர்.
மேலும் ராஜவாய்க்கால் கரையோர பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பங்களாமேட்டில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியதால் பாரஸ்ட்ரோடு தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. தேனி பழைய பஸ் நிலையம், பழைய டி.வி.எஸ். சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி குளமாக காட்சி அளித்தது.
சுற்றுச்சுவர் இடிந்தது
தேனி முல்லைநகரில் பெய்த பலத்த மழையின் போது, அப்பகுதியில் உள்ள தீயணைப்ப படை வீரர் சுரேஷ்குமார் என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், மழைநீர் வீட்டுக்குள் புழுந்தது. வீட்டில் இருந்த கட்டில், மெத்தை போன்ற பொருட்கள் தண்ணீர் நனைந்து சேதம் ஆகின.
இதேபோல் கம்பம், பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அப்போது வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.