தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம் 22-ந் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முத்துநகர் கடற்கரை பூங்கா மூடப்பட்டது.

Update: 2023-05-21 19:00 GMT

துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம் 22-ந் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முத்துநகர் கடற்கரை பூங்கா மூடப்பட்டது.

துப்பாக்கி சூடு நினைவு தினம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மே மாதம் 22-ந் தேதி 100-வது நாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர். அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் 22-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

இதற்கிடையே வக்கீல் அரிராகவன் பொதுமக்கள் கூடும் முத்துநகர் கடற்கரையில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி போலீசுக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் முத்துநகர் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் என வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.

இதையடுத்து போலீசார், அஞ்சலி நிகழ்ச்சி எதுவும் முத்துநகர் கடற்கரையில் நடக்கவில்லை. ஆகையால் அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

முத்துநகர் பூங்கா மூடல்

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முத்துநகர் கடற்கரை பூங்கா நேற்று முழுவதும் மூடப்பட்டது. அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று பீச் ரோடு முழுவதும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

2,200 போலீசார்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், 'தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நினைவு தினம் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். அனுமதி பெறாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது.

தூத்துக்குடியில் வெளிமாவட்ட போலீசார் 1,200 பேர் உள்பட மொத்தம் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்