அந்தியூர் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு
அந்தியூர் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறை பிடிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி ஈரெட்டி பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து எடுக்கக்கூடிய கற்களை லாரிகளில் அதிக அளவு ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள ரோடுகள் குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகின்றன. மேலும் லாாிகள் மலைப்பாதையில் வரும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நேற்று அதிக பாரம் ஏற்றி வந்த கல்குவாரி லாரியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், 'எங்கள் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் எங்கள் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை அனுமதிக்க கூடாது' என்றனர். இதுகுறித்து போலீசார் பொதுமக்களிடம் கூறுகையில், அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.