காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரியில் கடும் பனிமூட்டம்-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் கடந்த 28-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை இலங்கை திரிகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக தென் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிருடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரியில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று காலை ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.எதிரில் வந்த வாகனங்கள் சரிவர தெரியவில்லை. மேலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டினர். கடும் குளிர் காரணமாக பள்ளி கல்லூரி சென்ற மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். இதேபோல் மதியத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக லேசான மழை 3 மணி நேரம் பெய்தது. ஊட்டியில் குறைந்தபட்சமாக நேற்று 12 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக, 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.