கோவையில் கடும் பனிமூட்டம்

கோவையில் நேற்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

Update: 2022-12-06 18:45 GMT


கோவையில் நேற்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

பரவலாக மழை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதாலும், கேரள எல்லையில் இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகதான் கோவையை குளுகுளு நகரம் என்றும் அழைப்பது உண்டு.

அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை, ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை கால மழை பெய்து வருகிறது.

கடும் பனி மூட்டம்

அந்த வகையில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 210 மி.மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 150 மி.மீட்டர் மழை பெய்துவிட்டது. இன்னும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக கோவை-சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. மலைப்பிரதேசங்களில் இருப்பதுபோன்று பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் குழந்தைகள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், அவற்றை செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி துறைத்தலைவர் பேராசிரியர் சுப.ராமநாதன் கூறியதாவது:-

கூடுதலாக ஒரு மணி நேரம்

கோவையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று கூடுதலாக ஒரு மணி நேரம் நீடித்தது. பொதுவாக பனி இருந்தால் மழை பெய்யாது என்று கூறுவது உண்டு. ஆனால் நேற்று முன்தினம் மழை பெய்து இருக்கிறது.

பனி தாக்கத்தில் மொத்தம் 8 அளவு உண்டு. அதில் நேற்று கோவையில் 6-வது அளவில் பனியின் தாக்கம் இருந்தது. கோவையில் வழக்கமாக டிசம்பர் மாதம் 28-ந் தேதி வரை மழை பெய்யும். எனவே கோவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சராசரியாக பெய்யும் அளவைவிட தாண்டி பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்