பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
ஏகாதசியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம்செய்தனர்.
ஏகாதசியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம்செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-ம் நாளை 'வைகுண்ட ஏகாதசி' என கொண்டாடப்படுகிறது. வைணவர்கள், தான் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக இருக்கும் வைகுண்ட கதவுகள் இந்த தினத்தில் திறக்கப்படுவதாக நம்புகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 'பரமபத வாசல்' என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது.
இதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவிலில், சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 5 மணிக்கு நவநீத வேணுகோபால சாமி சொர்க்கவாசல் வழியாக வந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பொன்மலை சீனிவாச பெருமாள்
இதேபோல், கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனையும், காலை 5 மணிக்கு சாமி சொர்க்கவாசல் வழியாக வந்தார். கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேணுகோபால சாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவில், நரசிம்ம சாமி கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ளவெங்கட்ரமண சாமி கோவில், தம்மண்ண நகர் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், போச்சம்பள்ளியை அடுத்த சென்றாய பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
ராயக்கோட்டை
ராயக்கோட்டையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோட்டையில் உள்ள விஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் லட்சுமிநாராயணா சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே எடுத்து வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சாமி திருவீதி உலா வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்
ஓசூர் அருகே கோபசந்திரத்தில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி சாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தியுடன் கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள லட்சுமி வெங்கட்ரமண சாமி கோவில், சூளகிரி பிரசன்ன வரதராஜசாமி கோவில், பஸ்தலபள்ளியில் உள்ள அங்குசகிரி திம்மராயசாமி கோவில், பேரிகை அருகே குடிசெட்லுவில் உள்ள திம்மராயசாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் அதிகாலையிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பர்கூர்
பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேபள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.