அம்மாபேட்டை அருகே நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி தற்கொலை

அம்மாபேட்டை அருகே நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி தற்கொலை செய்துகொண்டாா்

Update: 2023-09-27 22:30 GMT

அம்மாபேட்டை அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணன் மீது பாசம்

அம்மாபேட்டை அருகே உள்ள செம்படாபாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46) இவருடைய தம்பி வெங்கடேசன் (44). தொழிலாளி. அண்ணன் ஆறுமுகத்தின் மீது வெங்கடேசன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஆறுமுகம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆறுமுகம் இறந்துவிட்டார். வீட்டில் வைத்திருந்த அண்ணனின் உடலை பார்த்து வெங்கடேசன் கதறி துடித்தார். இறுதி சடங்குகள் முடிந்த பின்னர் ஆறுமுகத்தின் உடலை தகனம் செய்வதற்காக பவானியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன.. அப்போது வெங்கடேசன் தன்னுடைய மனைவி சங்கீதாவிடம், அண்ணன் உடலை நீ உறவினர்களுடன் முதலில் பவானிக்கு கொண்டு செல். நான் பின்னால் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கினார்

அதன்படி சங்கீதா உறவினர்களுடன் ஆறுமுகத்தின் உடலை பவானி மின்மயானத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் அங்கு வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மணக்காட்டூருக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தூக்குப்போட்டு வெங்கடேசன் பிணமாக தொங்குவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த வெங்கடேசன் அவருடைய இறப்பை தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தம்பியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்