சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை-டாக்டர்கள் குழுவினருக்கு டீன் பாராட்டு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு டீன் மணி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-04-01 22:57 GMT

2 வயது குழந்தை

சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த ராமன்- ராஜூ தம்பதிக்கு மிதுனா (வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு சளி தொந்தரவு மற்றும் இதயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டைகள் இருந்தன. இதனால் குழந்தையை பெற்றோர் அறுவை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது, குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, இதயத்தில் ஓட்டை, வால்வு அடைப்பு இருப்பது தெரியவந்தது. மேலும், குழந்தையின் எடை 11 கிலோவாக இருக்க வேண்டிய நிலையில் எடை குறைந்து 7 கிலோவாக இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

இதய அறுவை சிகிச்சை

இதையடுத்து சிறுமி மிதுனா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். இந்நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரி இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன்.ராஜராஜன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இதேபோல், சேலத்தை சேர்ந்த 3 வயது சிறுமிக்கும் இதயத்தில் ஓட்டைகள் மற்றும் வால்வு அடைப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். இதையடுத்து அந்த குழந்தைக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர்களுக்கு பாராட்டு

இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளை நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் மணி நலம் விசாரித்தார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக வழங்கினார். அப்போது, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்த இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன்.ராஜராஜன், மயக்கவியல் துறை மருத்துவர் திலிஷ், உள்தங்கு மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் ஆகியோரை டீன் மணி பாராட்டினார்.

இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி நிருபர்களிடம் கூறுகையில், இதய கோளாறு மற்றும் வால்வு அடைப்பால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை செய்து முடித்த டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். 2021-ம் ஆண்டு முதல் இதுவரை 14 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நவீன கருவிகளுடன் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், பிரசவத்திற்காகவும் அதிகளவில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள், என்றார்.

மேலும் செய்திகள்