செவி திறனற்ற 5 சிறார்களுக்கு காதொலிக்கருவி
செவி திறனற்ற 5 சிறார்களுக்கு காதொலிக்கருவி கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
செவி திறனற்ற 5 சிறார்களுக்கு காதொலிக்கருவி கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காதொலிக்கருவி மாற்றிக் கொடுக்க வேண்டும் என மனுக்கள் வழங்கி வந்தனர்.
காது கேளாத 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் பிளான்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் காதொலி எந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்பு அவர்களுக்கு காது கேட்கும் திறன் கிடைப்பதோடு பேச்சாற்றலும் கிடைக்கப்பெறும். அந்த வகையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். இந்த செலவீனத்தை தமிழக முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தமிழக அரசாங்கம் முழுமையாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது.
எனினும் அறுவை சிகிச்சைக்கு பின் கேட்கும்திறன் பெற்றவரங்களுக்கு காதொலி கருவி பழுதடைந்து விடுவதால் அவர்கள் கேட்கும் திறனை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முகாமில் பலர் தெரிவித்து வந்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 25 மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பின்னர் அதற்காக குழுக்கள் அமைத்து குழுவின் மூலமாக காதொலி கருவிக்கான பழுது நீக்கும் சிறப்பு முகாம் நடந்தது. அந்த முகாமில் 5 செவி திறனற்ற சிறார்களுக்கு மட்டும் காதொலிக்கருவி உதிரி பாகங்களில் பழுது ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உதிரி பாகங்கள், பழுது நீக்கிட தேவைப்பட்ட நிதி ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 876 -ஐ மாவட்ட கலெக்டர், விருப்ப நிதியினை விடுவித்து அந்த நிதியை கொண்டு உதிரி பாகங்கள் வழங்கிட உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் குழுவின் மூலம் உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பெறப்பட்ட காதொலி கருவி உதிரிபாகங்களை மாவட்ட கலெக்டர் நேற்று 5 குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.
முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.