மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டையை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க ஒருங்கிணைப்பாளர் அனிதா தலைமை தாங்கினார்.
இதில், காப்பீடு திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு சுகாதார திட்டம் அல்லது தேசிய நலக்குழும திட்டத்தில் பணியாளர்களாக நியமித்து ஊதிய விடுப்பு, பொது வைப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.