ரூ.5 லட்சத்தில் சுகாதார வளாகம்
கொடைக்கானலில், செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா, நேற்று நடைபெற்றது.
கொடைக்கானல் தாலுகா கூக்கால் ஊராட்சியில் குண்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அறிந்த கொடைக்கானல் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பள்ளி வளாகத்தில் சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன்படி செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு செஞ்சிலுவை சங்க கிளை தலைவரும், கொடைக்கானல் முன்னாள் நகராட்சி தலைவருமான கே.சி.ஏ. குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு, முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் பரிசு வழங்கினார். விழாவில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், சங்க துணை தலைவர்கள் கே.சி.ஏ. சாம் ஆபிரகாம், கருணாநிதி, சலாமத், தாவூத், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் குகப்பிரியா, ஒப்பந்ததாரர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர் சூசைஜான் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.