தூத்துக்குடியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம்
தூத்துக்குடியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பள்ளி துணை முதல்வர் பிரியங்கா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர நல அலுவலர் சுமதி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சுற்றுப்புறத்தை தூய்மைபடுத்துதலின் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து இருப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
தொடர்ந்து சுற்றுப்புறத் தூய்மை பற்றிய சிறந்த வாசகங்கள், பிளாஸ்டிக் குப்பைகள் தவிர்த்தலின் அவசியம் பற்றிய வாசகங்கள், பயனற்ற பொருட்களில இருந்து பயன் உள்ள பொருட்கள் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு மண்டல தூய்மை பரப்புரையாளர்கள் சந்தனக்குமார், அர்ஜூன், சுப்பிரமணியன், ராஜகோபால், முருககுமார், இசக்கிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை உதயம்மாள் நன்றி கூறினார்.