ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தகிறிஸ்தவ பணியாளர் அந்தோணி வாட்சன் பிரப் பிறந்தநாள் விழா;சாலைக்கு மீண்டும் பெயர் சூட்ட கோரிக்கை

He was the President of Erode Municipal Council Christian Worker Anthony Watson Prep Birthday Party; Request to re-name the road

Update: 2023-01-04 21:57 GMT

ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்த கிறிஸ்தவ பணியாளர் அந்தோணி வாட்சன் பிரப் பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டின் முக்கிய சாலைக்கு மீண்டும் பிரப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

அந்தோணி வாட்சன் பிரப்

ஈரோடு மாநகராட்சி, நகர்மன்றமாக இருந்தபோது, 1904 முதல் சுமார் 10 ஆண்டுகள் நகர்மன்ற தலைவராக அதாவது ஈரோடு நகர பரிபாலனை சபையின் தலைவராக இருந்தவர் அந்தோணி வாட்சன் பிரப். இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லியோடன்ஸ்டன் பகுதியில் 5-1-1861-ம் ஆண்டு பிறந்தார். 1885-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. இவரது மனைவி ரோசட்டா ஜேன் ஜூலி. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.

கிறிஸ்தவ மறை பணியாளராக இருந்த பிரப், 1894-ம் ஆண்டு அவரது மனைவியுடன் தமிழகத்துக்கு வந்தார். லண்டன் மிஷனரி சொசைட்டி மூலம் அவர் கிறிஸ்தவ மறை போதனை பணிக்காக தமிழகத்தில் அவர் வந்து இறங்கியது ஈரோடு நகரமாகும்.

கோஷா ஆஸ்பத்திரி

இந்தநிலையில் ஈரோட்டை சேர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு உரிய வசதியான ஆஸ்பத்திரிகள் இல்லாதிருந்தது. குறிப்பாக பிரசவத்தின் போது பெண் டாக்டர்கள் இல்லாமல் பெண்கள் கடும் சிரமங்களை சந்தித்ததை கண்டு மனம் வெதும்பினார். 1900-ம் ஆண்டு ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியை தொடங்கினார்.

ஈரோட்டின் நகர்மன்ற தலைவராக 1904-ம் ஆண்டு பொறுப்பு ஏற்ற அவர் ஈரோடு நகர கட்டமைப்பு பணிகளில் ஆர்வம் காட்டினார். ஈரோடு நகர் பகுதியில் மண் சாலைகளாக, மாட்டு வண்டி சாலைகளாக இருந்த பல சாலைகளின் கட்டமைப்பை மாற்றினார். தற்போதைய அரசு ஆஸ்பத்திரி மேம்பாலம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையான சாலையை தனது சொந்த செலவில் அமைத்ததாக தெரிகிறது.

1927-ம் ஆண்டு கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் கட்ட முடிவு செய்தார். கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரப், இந்தோ சராசனிக் என்று அழைக்கப்படும் இந்திய மொகலாய கூட்டு கட்டிடக்கலையில் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார்.

இவரதுமனைவியின் கல்லறை ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் இன்றும் பராமரிக்கப்படுகிறது. பிரப் பணிக்காலத்தை தொடர்ந்து கிறிஸ்தவ பணியாளர் எச்.ஏ.பாப்லி ஆலய பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர்தான் ஆலயத்துக்கு பிரப் நினைவு என்ற பெயரை சூட்டினார். 1934-ம்ஆண்டு பிரப் மரணத்தை தொடர்ந்து ஈரோடு நகர்மன்ற சபை கூடி, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர் கட்டிய சாலைக்கு பிரப் சாலை என்றும் பெயர் சூட்டியது.

161-வது பிறந்தநாள்

ஈரோடு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய 29 ஆண்டுகளில் 94 பள்ளிக்கூடங்கள், 20 கிறிஸ்தவ ஆலயங்கள், 2 ஆஸ்பத்திரிகள் கட்டி பொதுமக்களுக்கு அளித்தார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் இன்று (வியாழக்கிழமை) சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் அந்தோணி வாட்சன் பிரப் 161-வது பிறந்தநாள் விழா ஆயர் ஏ.ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நடக்கிறது. இதில் செயலாளர் ஐ.ஆல்ட்ரின் ராஜேஸ்குமார், பொருளாளர் ஐ.பாஸ்கர்பாபு மற்றும் அனைத்து நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து செயலாளர் ஐ.ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் கூறியதாவது:-

பிரப் தனது சொந்த செலவில் பல சாலைகள்அமைத்தார். அதில் ஒரு சாலைக்கு ஈரோடு நகர்மன்றமே அவரது பெயரை சூட்டியது. அந்த பெயர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்றப்பட்டு இருப்பது ஏற்கக்கூடியது இல்லை. எனவே மீண்டும் பிரப் பெயரை குறிப்பிட்ட சாலைக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பிரப் பிறந்த நாளில் இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் காலை 10 மணி முதல் 11 மணிவரை காளைமாடு சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் ஈரோடு வாழ் மக்கள் வேறுபாடுகள் இன்றி கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்