படகில் சென்றபோது தவறி விழுந்து2 பெண்கள் கடலில் மூழ்கி சாவு

குலதெய்வ கோவிலுக்கு சென்ற இடத்தில் படகை அமர்த்தி, தேவிப்பட்டினம் கடலுக்குள் சென்றபோது திடீரென 2 பெண்கள் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் கதி என்ன? என்று தெரியவில்லை.

Update: 2023-02-20 18:45 GMT

பனைக்குளம்,

குலதெய்வ கோவிலுக்கு சென்ற இடத்தில் படகை அமர்த்தி, தேவிப்பட்டினம் கடலுக்குள் சென்றபோது திடீரென 2 பெண்கள் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் கதி என்ன? என்று தெரியவில்லை.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்

மதுரை தெப்பக்குளம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த 11 பேர் குடும்பத்தினருடன் மகா சிவராத்திரி விழாவையொட்டி தங்களது குல தெய்வ கோவிலான ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் படையாச்சி காலனியில் உள்ள உலகநாயகி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று அருகே உள்ள தேவிபட்டினம் கடற்கரைக்கு சென்றனர்.

தேவிபட்டினம் படையாச்சி காலனியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சுந்தர் (28) என்பவர், தனக்கு சொந்தமான என்ஜின் பொருத்திய பைபர் படகில் 11 பேரையும் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் அழைத்து சென்றார்.

கடலில் மூழ்கி 2 பெண்கள் சாவு

கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக படகில் இருந்து திடீரென மணிமேகலை(வயது 54), இருளாளி(56) ஆகிய 2 பேரும் தடுமாறி கடலுக்குள் விழுந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற படகில் இருந்த உறவினரான என்ஜினீயர் முத்துமாரி(33) என்பவர், கடலில் குதித்தார். அவரும் கடலில் மூழ்கினார்.

இதையடுத்து சுந்தர், அந்த பைபர் படகை கரையை நோக்கி ஓட்டி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து வந்து கடலில் குதித்து, 3 பேரையும் தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் மணிமேகலை, இருளாளி ஆகிய 2 பேரின் உடல்கள் கரையோரத்தில் ஒதுங்கின. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. வாலிபர் முத்துமாரியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தேவிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, துணை சூப்பிரண்டு ராஜா, ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் (தேவிப்பட்டினம் பொறுப்பு) பாஸ்கரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் படகில் கடலுக்கு சென்று முத்துமாரியை தேடினார்கள். பலத்த காற்று வீசியதால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

அழைத்துச் சென்றவர் கைது

மீட்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினர் கதறியது பரிதாபமாக இருந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குபதிவு செய்து, சுந்தரை கைது செய்தனர். இது தொடர்பாக மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்