கத்தியால் வெட்டி மனைவி கொலை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-10-15 18:45 GMT

வானூர்

அடிக்கடி தகராறு

வானூர் அருகே தைலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி(38). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் மனைவியின் நடத்தையிலும் சங்கர் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. நேற்று காலையிலும் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி என்றும் பாராமல் பாக்கியலட்சுமியில் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

வெட்டிக் கொலை

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாக்கியலட்சுமியை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு வீட்டிலேயே பதுங்கி இருந்த சங்கரை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தச்சு தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் தைலாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்