சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 பேர் கைது
தூத்துக்குடியில் சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிறுத்தை தோல் பதுக்கி வைப்பு
தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் சூரியநாரயணன் (வயது 42). இவர் இந்து அறநிலையத்துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் சட்டவிரோதமாக சிறுத்தை தோல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தாமோர் தலைமையில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி சூரியநாராயணன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் சிறுத்தை தோல் பதுக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருப்பதாக சூரிய நாராயணனை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான சிறுத்தை தோலையும் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
மேலும் இந்த வழக்கு தொடர்பாக வனத்துறை உதவி வன பாதுகாவலர் சக்திவேல் தலைமையில் வனச்சரக அதிகாரி சுப்பிரமணியன், காப்பாளர் பாலகிருஷ்ணன், காவலர் லட்சுமணன் மற்றும் வனவர் மகேஷ் ஆகியோர் சூரியநாராயணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுத்தைதோல் பதுக்கிய வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜி மகன் ராம்தாஸ் (வயது 38) மற்றும் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவாபட்டர் மகன் விக்னேஷ் (37) ஆகிய 2 பேரை நேற்று வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், விக்னேஷ் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளதும், அவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அன்பளிப்பாக இந்த சிறுத்தை தோலை கொடுத்ததும், அதை விக்னேஷிடம் இருந்து ராம்தாஸ் வாங்கி சூரியநாராயணனிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராம்தாஸ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.