தாளவாடி பகுதியில் ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்த 'கருப்பன்' யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதுகும்கியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டதால் பரபரப்பு

கும்கியுடன் ஆக்ரோஷமாக சண்டை

Update: 2023-04-17 21:20 GMT

தாளவாடி பகுதியில் கடந்த 1 ஆண்டாக அட்டகாசம் செய்து வந்த 'கருப்பன்' யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மேலும் 'கருப்பன்' யானை, கும்கி யானையுடன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

'கருப்பன்' யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று இரியபுரம், கும்டாபுரம், மகாராஜன்புரம், மல்குத்திபுரம், சிக்கள்ளி, ஜோரைக்காடு, திகினாரை, கரளவாடி, தமிழ்புரம், தர்மாபுரம், எரகனள்ளி, கல்மண்டிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைகோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வந்தது. 'கருப்பன்' யானை என பெயரிடப்பட்ட அந்த காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

மேலும் விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயிகளான தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா, ஜோரைக்காடு பகுதியை சேர்ந்த மாதேவா ஆகியோரை 'கருப்பன்' யானை கொன்றது. எனவே 'கருப்பன்' யானையை பிடிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது

இதைத்தொடர்ந்து 'கருப்பன்' யானையை பிடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி முதல் தடவையாக கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதையடுத்து 2 கும்கி யானைகளும் சேர்ந்து 'கருப்பன்' யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டன.

பின்னர் 2 கும்கி யானைகளும் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிறிது நாட்கள் வரை விவசாய தோட்டத்துக்குள் வராமல் இருந்த 'கருப்பன்' யானை மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை நாசப்படுத்தியது.

மயக்க ஊசி செலுத்தியும்...

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் இருந்து அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் மீண்டும் ஜோரைக்காடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் 'கருப்பன்' யானையை வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை. மேலும் மயக்க ஊசிக்கு மயங்காத 'கருப்பன்' யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி சென்றது.

இதனால் கும்கி யானைகள் மீண்டும் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் சிறிது நாட்களிலேயே 'கருப்பன்' யானை மீண்டும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையானது. இதன்காரணமாக 'கருப்பன்' யானையை பிடிக்க வேண்டும் எனக்கோரி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் திணறல்

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் 20-ந் தேதி தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. இதைத்தொடர்ந்து கும்டாபுரம் கிராமத்தில் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மார்ச் 25-ந் தேதி கும்கி யானைகள் உதவியுடன் 2 முறை 'கருப்பன்' யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் அந்த மயக்க ஊசிக்கும் அடங்காமல் வனப்பகுதிக்குள் 'கருப்பன்' யானை ஓடிவிட்டது.

எனவே 'கருப்பன்' யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். கடந்த 5-ந் தேதி 2 கும்கி யானைகளும் லாாியில் ஏற்றப்பட்டு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் 'கருப்பன்' யானையின் அட்டகாசம் குறையவில்லை. தொடர்ந்து தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

கும்கி யானைகள் வரவழைப்பு

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் இருந்து மாரியப்பன், சின்னதம்பி என்ற 2 கும்கி யானைகள் தாளவாடியை அடுத்த மகாராஜன்புரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 'கருப்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்காக ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில், வனச்சரகர்கள் சதீஸ் (தாளவாடி) ராமலிங்கம் (ஜீர்கள்ளி), மருத்துவ குழுவினர்களான ஆனைமலை பகுதியை சேர்ந்த கால்நடை டாக்டர் விஜயராகவன், ஓசூர் டாக்டர் பிரகாஷ், சத்தியமங்கலம் டாக்டர் சதாசிவம், மற்றும் ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

வழக்கம்போல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 'கருப்பன்' யானை நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகாராஜன்புரத்தை அடுத்த இரியபுரம் பகுதியில் உள்ள மானாவாரி நிலத்துக்கு வந்தது. உடனே வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் 'கருப்பன்' யானையின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே இருந்தனர். இரியபுரத்தில் இருந்து 'கருப்பன்' யானை மகாராஜன்புரத்தில் உள்ள மூர்த்தி என்பவரின் கரும்பு தோட்டத்துக்குள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் புகுந்தது.

உடனே வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் 'கருப்பன்' யானையை 2 கும்கி யானைகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுற்றிவளைத்தனர். இதைத்தொடர்ந்து காலை 5.35 மணி அளவில் 'கருப்பன்' யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் 'கருப்பன்' யானை மயங்கியபடி நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் 'கருப்பன்' யானையை பிடித்து அதன் கால்களில் கயிறுகள் கட்டப்பட்டன.

ஆக்ரோஷத்துடன் சண்டை

இதைத்தொடர்ந்து வனத்துறையின் லாரி கொண்டு வரப்பட்டு அதில் 'கருப்பன்' யானையை ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் லாரியில் ஏறாமல் 'கருப்பன்' யானை அடம் பிடித்தது. இதனால் 'கருப்பன்' யானையை லாரியில் ஏற்ற மாரியப்பன் என்ற கும்கி யானை இறங்கியது. அப்போது கும்கி யானையான மாரியப்பனுடன், 'கருப்பன்' யானை ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் 'கருப்பன்' யானை பணிந்தது. இதையடுத்து மாரியப்பன், சின்னதம்பி கும்கி யானைகள் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் லாரியில் 'கருப்பன்' யானை ஏற்றப்பட்டது.

விவசாயிகள் நிம்மதி

கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய 'கருப்பன்' யானை பிடிபட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஒரு ஆண்டாக அட்டகாசம் செய்து வந்த யானைக்கு 'கருப்பன்' யானை என பெயரிடப்பட்டது. ஆனால் 'கருப்பன்' என பெயரிடப்பட்டதால் தான் யானை பிடிபடவில்லை. எனவே 'கருப்பன்' யானைக்கு பெயரை மாற்ற வேண்டும் என வனத்துறையினருக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருப்பன் யானைக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி ஜீர்கள்ளி ஆண்-1 என பெயர் வைத்தனர். பெயர் மாற்றப்பட்ட உடனேயே யானை பிடிபட்டுவிட்டது. இதனால் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்