பழனியில் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பைபாஸ் சாலை; பொதுமக்கள், பக்தர்கள் அவதி

பழனியில் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பைபாஸ் சாலையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-02-28 05:15 GMT

உலக பிரசித்தி பெற்றதும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக பழனி நகர் விளங்குகிறது.

பழனி பைபாஸ் சாலை

ஆன்மிக நகரான பழனிக்கு கார், பஸ், வேன் போன்ற வாகனங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகிறார்கள்.

பழனியை இணைக்கும் முக்கிய சாலையாக திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவை, பொள்ளாச்சிக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன.

நகர் வளர்ச்சி, வாகன பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பழனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே பழனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இறைச்சி, மருத்துவ கழிவுகள்

இதைக்கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி புறநகர் பகுதியான சிவகிரிப்பட்டியில் இருந்து சண்முகநதி வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் லாரிகள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

மேலும் ஈரோடு, கோவை பகுதியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வாகனங்களும் இந்த பைபாஸ் சாலை வழியாக வந்து கொடைக்கானல் மலைப்பாதைக்கு செல்கின்றன. இந்த பைபாஸ் சாலையோர பகுதியில் இடும்பன் கோவில், பழனியாண்டவர் சிறுவர் பூங்கா ஆகியவை உள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பழனி பைபாஸ் சாலை தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள், மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அந்த சாலை பகுதியை கடந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் மூக்கை பொத்தியபடியே செல்கின்றனர். துர்நாற்றம் வீசுவது ஒருபுறம் இருந்தாலும், கழிவுகளால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

சுவாசக்கோளாறு

சில சமயத்தில், அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கழிவுகளுக்கு தீ வைப்பதால் அருகே உள்ள சிறுவர் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.

மேலும் இறைச்சி கழிவுகளை தின்பதற்காக பைபாஸ் சாலையோரத்தில் நாய்கள் கூட்டமாக சுற்றுவதால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுகின்றன. எனவே சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையோரத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கண்காணிக்க வேண்டும்

குப்புசாமி (தனியார் நிறுவன ஊழியர், பழனி):- பழனி நகரில் கழிவு மேலாண்மை முறையாக இல்லாதது பெரும் கவலை அளிக்கிறது. பழனி பைபாஸ் சாலையில் குப்பைகள் கொட்டி எரிக்கும்போது எழும் புகைமூட்டத்தால் அடிக்கடி விபத்து அரங்கேறுகிறது. பழனி நகராட்சி, சிவகிரிப்பட்டி ஊராட்சி சார்பில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கழிவுகள் கொட்டுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நகர், அடிவாரத்தில் அனைத்து கடைகளிலும் குப்பைத்தொட்டிகள் வைத்து, நேரடியாக சேகரிக்க வேண்டும். பின்னர் அவற்றை மேலாண்மை செய்ய வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் ராணுவ வீரர், பழனி):- பழனியாண்டவர் பூங்கா அருகே ஓட்டல் கழிவுகள், கட்டிட கழிவுகள், உணவு கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் உள்ள பழனியாண்டவர் பூங்காவுக்கு குழந்தைகளுடன் வருவோர் கடும் அவதி அடைகின்றனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் நச்சுபுகை வெளியேறி அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை மேலாண்மை

முருகேசன் (ஆட்டோ டிரைவர், பழனி அடிவாரம்):- பழனி புறநகர் பகுதியான திருநகர், சேரன்ஜீவாநகர், நேதாஜிநகரில் இருந்து பழனியாண்டவர் சிறுவர் பூங்கா, கோவில் வருவதற்கு பைபாஸ் சாலை வழியே சென்றால் தூரம் குறைவாக இருக்கும். ஆனால் தற்போது பைபாஸ் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டி எரிப்பதால் கடும் புகைமூட்டம் எழுகிறது. இதனால் அப்பகுதிகளில் இருந்து சவாரி வரும் முதியோர், குழந்தைகளின் நலன் கருதி பழனி நகர், அடிவாரம் வழியாக சுற்றி செல்கிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படையும் வகையில் சிவகிரிப்பட்டி-சண்முகநதி பைபாஸ் சாலையில் குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தகுமார் (விவசாயி, இடும்பன்நகர்):- இடும்பன்குளத்து பாசன பகுதியில் உள்ள வயல்களுக்கு பைபாஸ் சாலை வழியே தான் தினமும் காலை, மாலையில் சென்று வருகிறோம். ஆனால் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையோரத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளை ஆடு, மாடுகள், நாய்கள் தின்பதால் அதற்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே பழனி, சிவகிரிப்பட்டியில் குப்பை மேலாண்மையை உரிய முறையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்